
ஆண்டுவிழாக் கொண்டாட்டம்,2025-விவாதப் போட்டி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஒரு சிறப்பு அம்சமாக திகழ்கின்ற திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையமானது கடந்த ஆண்டு 2024 இல் தொடங்கி பல நிகழ்வுகளையும், போட்டிகளையும் நடாத்தி வருகின்றது. இவ்வருடமும் தனது மாணவர்களிடையே பல்வேறு கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஒழுங்கமைத்திருந்தது. அவற்றின் ஆரம்ப நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மாணவர்களிடையே விவாதப் போட்டி ஒன்றினை கடந்த 20.09.2025 (சனிக்கிழமை) நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது, இப்போட்டியானது 20.09.2025 காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜேம்ஸ் ரொபின்சன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் மங்கள விளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. விளக்கின் முதல் ஒளியினை பணிப்பாளர் அவர்கள் ஏற்றி வைக்க இரண்டாவது ஒளியினை வணிகமானி பட்டக்கற்கை நெறிகளின் இணைப்பாளர் பேராசிரியர் நற்குணராஜா உமாகாந்த் அவர்களும், அவரின் பின்பு விவாதப்போட்டிகளுக்கு நடுவர்களாக கலந்து கொண்ட பிரம்மஸ்ரீ. மதுரவாகீசர். சுவாமிநாத சர்மா , சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் முதுதத்துவமானிபட்ட மாணவன் செல்வன். விஸ்வகுமார் விஸ்ணுஜன் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக முதுகலைமானி மாணவி திருமதி தனிஸ்ரா சத்தியேந்திரா அவர்களும் ஏற்றி வைத்தனர். அவர்களைத் தொடர்ந்து திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் பயிற்றுநர் வழிகாட்டி திருமதி. கலைவாணி தனஞ்சயன் அவர்களும் தொடர்ந்து திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் உத்தியோகஸ்தர்கள் சார்பில் திரு. பொ. பத்மநாதன் அவர்களும் மாணவர்களின் சார்பில் ஆண் மாணவ பிரதிநிதி ஒருவரும், பெண் மாணவ பிரதிநிதி ஒருவரும் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான குழு புகைப்படம் எடுக்கின்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.
மாணவர்களினுடைய புகைப்படம் எடுக்கின்ற நிகழ்வினைத் தொடர்ந்து நிகழ்வின் தலைவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜேம்ஸ் ரொபின்சன் அவர்களினால் தலைமையுரை இடம் பெற்றது. மாணவர்களுக்கான அறிவுரைகளையும் வாழ்த்துக்களையும் வழங்குகின்றவாறாக பணிப்பாளர் ஐயாவின் உரை இடம் பெற்றிருந்தது. மேலும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் சிறப்பான வகையில் இந்திகழ்வுகளினை ஒழுங்கமைத்திருப்பதாகவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுடன் மாணவர்களினுடைய ஆளுமையையும் திறமைகளையும் வளர்ப்பதற்கான பல்வேறு விதமான செயற்பாடுகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் எமது சமூகத்தின் கல்விப் பாரம்பரிய வரலாற்றிலே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இப்பிராந்திய மக்களின் கல்வி வளர்ச்சியில் அளப்பரிய சேவையை யாழ் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையமானது ஆற்றி வருகின்றது. எனவும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்துழைப்புடனும் மற்றும் பல்துறை சார்ந்த நலன் விரும்பிகளின் ஆதரவுடனும் எமது பணியினை விஸ்தரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைளை விரைவாகவும் மற்றும் ஆக்கபூர்வமானதாகவும் முன்னோக்கி நகர்த்த நாம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். எனவும் மாணவர்களினுடைய கல்வி வளர்ச்சிக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி நிலையமானது பல்வேறு விதமான சேவைகளை வழங்குமெனவும் மாணவர்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் ஊட்டுகின்ற வகையிலாக அவருடைய பேச்சினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அடுத்தாக வணிகமானி பட்டக்கற்கை நெறிகளின் இணைப்பாளர் பேராசிரியர் நற்குணராஜா உமாகாந்த் அவர்களும் தனது கருத்துக்களையும் கடந்த வருட போட்டிகளின் அனுபவங்களை தனது பேச்சினில் முன்வைத்து மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்திகளை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைத் தொடர்ந்து விவாதப்போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன. 10 அணிகளுக்கிடையே 5 போட்டிகள் முதல் சுற்றில் இடம் பெற்றன. மேலும் நடைபெற்று முடிந்த போட்டிகளிலிருந்து புள்ளிகளினடிப்படையில் கூடிய புள்ளிகளைப் பெற்ற 4 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன. இரண்டாம் சுற்றானது போட்டிகளுக்குள் நுழைவதற்கு முன்பதாக நடுவர்களினுடைய கருத்துக்களுடனும் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட நடுவர்களினுடைய மதிப்பெண்களின் மதிப்பீடுகள் தொடர்பாகவும் அமைந்திருந்தது, இதில் கலந்து கொண்ட 3 நடுவர்களும் தமது கருத்துக்களையும் முதலாவது சுற்றில் தாம் மாணவர்களிடையே இனங்கண்டு கொண்ட குறை நிறைகளை வெளிப்படுத்துவதான கருத்துக்களினை கூறியிருந்தனர். விவாதங்களின் போது எவ்வாறான மொழிநடை பயன்படுத்தப்பட வேண்டும், பேச்சாற்றல், பேச்சின் ஏற்ற இறக்கம், உடல்மொழி, கண்தொடர்பு போன்ற பல விடயங்களை தெளிவுபடுத்திக் கூறியிருந்தனர். அதுமட்டுமன்றி மாணவர்கள் மேடையேறும் போது தமது வாதத்திற்கான சூழலை தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் மேடையை தமக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தனர். இவர்களினுடைய கருத்துக்களினை தொடர்ந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். இதில் Bachelor of Arts – Batch I – Team A, Bachelor of Arts – Batch II – Team A, Bachelor of Commerce – Batch VIII – Team A மற்றும் Bachelor of Business Management – Batch XII போன்ற அணிகள் தகுதி பெற்றிருந்தன. இப்போட்டிகளுக்கான வெற்றிகளிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட 2 அணிகளே இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றுக் கொண்டன. இதில் குறிப்பாக Bachelor of Arts – Batch I – Team A மற்றும் Bachelor of Business Management – Batch XII அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளாக நடுவர் குழாமினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
11.10.2025 (சனிக்கிழமை) நடைபெற்ற விவாதப்போட்டியின் இறுதிப் போட்டியானது சுமார் பி.ப 12.00 மணியளவில் நூலகக் கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியிருந்தது. இன்றைய போட்டிகளின் நடுவர்களாக சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் முதுதத்துவமானிபட்ட மாணவன் செல்வன். விஸ்வகுமார் விஸ்ணுஜன் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக முதுகலைமானி மாணவி திருமதி தனிஸ்ரா சத்தியேந்திரா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த அணிகளான Bachelor of Arts – Batch I – Team A மற்றும் Bachelor of Business Management – Batch XII அணியும் விவாத மேடையை அலங்கரித்தனர். இப்போட்டிக்காக நாடும் வீடும் வளர்ச்சியடைய தேவைப்படுவது இளமையின் ஆற்றலா? முதுமையின் அனுபவமா? எனுப் தலைப்பு வழங்கப்பட்டிருந்தது. அதில் Bachelor of Arts – Batch I – Team A அணி முதுமையின் அனுபவம் எனவும் Bachelor of Business Management – Batch XII அணி இளமையின் ஆற்றல் எனவும் தங்களது ஆணித்தரமான வாதங்களை முன்வைத்திருந்தன. வாதங்களின் அடிப்படையில் முதுமையின் அனுபவம் என வாதிட்ட Bachelor of Arts – Batch I – Team A அணி வெற்றி பெற்று விவாதச் சுற்றுப் போட்டியின் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ்களும் கேடயமும் ஆண்டுவிழாவின் இறுதி நிகழ்வுகளின் போது வழங்கி வைக்கப்படவுள்ளது.


